LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

திருக்குறளில் தேன் கதைகள் - அரிமா புலவர் ந.நாகராஜன்

"திருக்குறளில் தேன் கதைகள் ". அரிமா புலவர் ந.நாகராஜன் .காவேரி பதிப்பகம் முதல் பதிப்பு 2000 .விலை ரூபாய் 35 மொத்த பக்கங்கள் 170
 
இது ஒரு திருக்குறள் சம்பந்தமான விளக்கப் புத்தகம் என்றும் சொல்லலாம் . திருக்குறள் பொருள் விளங்குகின்ற வகையிலே கதையாக சொல்லுகின்ற புத்தகம் என்றும் சொல்லலாம். தனது முன்னுரையில் கீழ்கண்டவாறு கூறுகிறார் ஆசிரியர்.
 
சின்ன சின்ன பொருட்களெல்லாம் அழகானவை. ஆழமானவை: ஆற்றல் வாய்ந்தவை. தத்திச் செல்லும் குழந்தை: தாவிக் குதிக்கும் சிற்றருவி; குவிந்திருக்கும் மொட்டு; குதித்து ஓடும் கன்று. எல்லாம் காண, கேட்க. தொட இன்பம் பயக்கும். அதே போலத் திருக்குறளின் சிறிய பாடல் காண அழகானது; கேட்க இனிமையானது; கருத்து ஆழமானது. திருக்குறள் சமுதாயச் சேற்றில் மலர்ந்துள்ள தாமரை. அதன் இதழ்கள் 1330. அதில் 13 இதழ்களை மட்டும் என் சிந்தனையில் சிறுகதைகளாக வழங்கியுள்ளேன். ஒவ்வொன்றும் இன்றைய சமுதாயத்தில் விழுந்துள்ள நிழல்களுக்கு வெளிச்சத்தைத் தந்திடும் என நம்புகின்றேன். இது மாணவர்கள் நெஞ்சில் - ஓர் ஆலம் விழுது இது இளைஞர்கள் வாழ்வுக்கு -ஓர் வழிகாட்டி இது மற்றவர் சிந்தனைக்கு - ஓர் தென்றல் என்று கூறுகிறார் ஆசிரியர் ந. நாகராசன் அவர்கள்.
***"*
இந்த புத்தகத்தில் கீழ்க்கண்ட 13 திருக்குறள் கதைகள் தேன் போல இனிக்க இனிக்க எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
1. பணிவும் தலைக்குனிவும்
2. முருங்கையும் முகுந்தனும்
3. பணமா? நல்ல மனமா?
4. சுகுணாவின் கண்ணீர்
5. மெருகு போட்ட கொலுசு
6. குவைத் பயணம்
7. கரடிப் பிடி
8. ஏமாறாதே! ஏமாற்றாதே!!
9. யாருக்கு?
10. உடைந்த நாற்காலி...
11. கற்றது கையளவு
12. காவாதான் வாழ்க்கை
13. எங்கே என்தம்பி
"உலகிலே தோன்றிய எத்தனையோ அறிஞர்கள் மக்களுக்கு அறிவுரையும், அறவுரையும் வழங்கியிருக்கிறார்கள். இவர்கள். தாம் வழங்கிய அறிவுரையை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்த்தார்கள். இரண்டே அறிஞர்கள்தாம் கால இடைவெளி, மண்ணின் இடைவெளி. ஆகியவற்றால் அறவுரைகளும் மாறக் கூடும் என்பதை யுணர்ந்து, யார் உரைத்த அறிவுரையாயினும் உன் பகுத்தறிவால் ஆய்ந்து பார்த்து, சரியென்று பட்டால் மட்டும் ஏற்றுக் கொள் என்றுரைத்தனர்; இருவரில், ஒருவர் திருவள்ளுவர்; மற்றொருவர் தந்தைபெரியார். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்பதையே, பெரியாரும் வழிமொழிந்துள்ளார். நாடு, இனம், சமயம், மொழி கடந்த, அடிப்படை உண்மைகளையே வள்ளுவப்பெருந்தகை கூறியுள்ளார். எனவே, திருக்குறள், எல்லா எல்லைகளையும் உடைத்துக் காலத்தையும் வென்று நிலை பெற்றுள்ளது.
 
'எல்லாப் பொருளும் இதன்பால் உளவிதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்' என, மதுரைத் தமிழ்நாகனார் உரைத்துள்ள மெய்ம் மொழியை உணர்ந்த, கவியருவி நாகராசன் அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் நடைபெறும் நிகழ்வுகளையே, கதைகளாக்கித் திருக்குறளுடன் பொருத்திக் காட்டுகிறார். வள்ளுவத்தை உலகமே போற்றுகிறது. உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் நடைமுறையில் காணும் ஒழுக்கச் சீர்கேடுகள் நீங்க கதைகளைப் படைத்துள்ளார். கதைகளுக்குரிய அடிப்படையாக, குறள்களைச் சுட்டிக் காட்டியுள்ளது சிறப்பாகும்.
 
ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு குறளை இறுதியில் அமைத்துள்ளார். தமிழர்களிடையே நற்குறளைப் படிக்கும் பழக்கம் சிலரிடையே காண்பதாகும். கதைகளைப் படிக்கும் பழக்கம் பலரிடையே காண்பதாகும். கதைப்போக்கில் காட்டப் பெற்றுள்ள அருங்குறள்களையாவது மனத்தில் நிறுத்தல் செய்துள்ளமை வாழ்விற்குப் பயனளிக்கும். 
 
இந்நூலுள் காணும் கதைகள் நமக்கு அறிவிப்பனவாக நாம் அறிய வேண்டியது...
1. பகைமை பாராட்டாதே
2. பட்டறிவின்பலன்
3. பேராசை வேண்டாம்
4. பெண்சிசுக்கொலை கூடாது
5. படிப்பால் பயன் பெறலாம்
6. வெளிநாட்டில் வேலை தேடி ஏமாறாதே (வஞ்சித்தால் வஞ்சிக்கப்படுவாய்)
7. தாயுள்ளமே பெரிது (குடியின் கேடு)
8. இடம் அறிந்து பேசு (ஏமாறாதே, ஏமாற்றாதே)
9. இழப்பிலும் பாடம் பெறலாம் .
10. நடிகனாகும் ஆசை நட்டமே தரும் 11. அறிவில் கூர்மை அவசியம்.
12. எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு.
13. உயிர்களைக் கொல்லாமை.
 
மேற்கூறிய சமுதாய மேம்பாட்டிற்கான கருத்துகளைத் தாம் ஆசிரியர் தம் கற்பனைத் திறத்தால் கதைகளாக்கியுள்ளார். கதைகளைப் படிப்பவர்கள் தாங்கள் நேரில் காணும் அல்லது கண்ட நிகழ்ச்சிகளை நினைவில் கொள்ள முடியும். அவைகளின் விளைவுகளை எண்ணிப் பார்க்கவும் கூடும். திருந்தவும் முடியும். 'பணிவும் தலைகுனிவும்' என்ற கதை பள்ளிப் பருவத்திலேயே நல்ல குணங்கள் உருவாக்கப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. செந்தில் உள்ளத்தில் பதியும் பொறுமை குணமும் சோமு மனத்தில் பதியும் பொறாமை குணமும் வளர்ந்து வாழ்வில் எப்படி வெளிப்படுகிறது. பொறுமை எப்படி வெற்றி பெறுகிறது என்பதைச் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது. அழுக்காற்றால், சிறுவயது முதல் பகைமை பாராட்டிய ஒருவன் தன் நண்பனின் பெருந்தன்மையை யுணர்ந்து திருந்துகின்றான். அழுக்காறு கொண்டு இவன் செய்த சிறுமைகளைத் தன் பெருந்தன்மையால் ஏற்று நன்மையே செய்து திருந்துகின்றான். இந்த நிகழ்ச்சியை, * மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல் *என்னும் குறளைப் பொருளுடன் பொருத்திக் காட்டும் திறன் பாராட்டுக்குரியது. 
 
"முருங்கையும் முகுந்தனும்" என்ற கதையில் பட்டறிவால் தெளிவு பெறுதலை முகுந்தன் என்ற கதைமாந்தன் முருங்கை மரத்தின் உச்சியில் ஏறுவது கொண்டு காட்டப்பெறுகிறது. ஆசிரியர் இக்கதையில் சித்த மருத்துவத்தின் சிறப்பையும் விளக்க வழி கண்டுள்ளார். அவரின் சித்த மருத்துவ அறிவு வெளிப்படுதல் குறிப்பிடத்தக்கதாகும். "பணமா? நல்லமனமா? என்ற கதை "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்பதை விளக்குகிறது. வேடியப்பன் சினிமா டிக்கட் வாங்கிக் கள்ளத்தனமாக விற்கும் பேராசைக்காரன். அவனுக்கு லாட்டரியில் பத்துலட்சம் பரிசு விழுந்ததும் ஆடம்பரவாழ்க்கையில் நாட்டம் கொண்டும் அனுபவிக்க இயலாமல் மாரடைப்பால் மாண்டு போகிறான். மனித வாழ்க்கை நல்ல மனத்தால் அமைய வேண்டுவதே என்பதைக் காட்டுகிறது.
மதுரை, சேலம், தருமபுரி மாவட்டங்களில் பெண் குழந்தைகளைப் பிறந்தவுடன் கொன்று விடும் கொடுமை நடை பெற்று வருகிறது என்பதைச் சமூக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்தக் கொடுமையைக் களையும் நோக்குடன், கதைபுனைந்து, வள்ளுவர் குறளை எடுத்துக் காட்டும் போது இவர் திருவள்ளுவர் பால் கொண்டுள்ள அளப்பரிய பற்று தெளிவாகத் தெரிகிறது.
 
"சுகுணாவின் கண்ணீர்" என்ற கதை பெண் சிசுக்கொலையை மையமாகக் கொண்டது. சுகுணாவின் தாய் பெண்குழந்தையைப் பெற்றெடுக்க அவளின் தந்தையும் பாட்டியும் கொலைசெய்ய முடிவெடுக்கின்றனர். சுகுணாவின் தோழி வள்ளி, அவள் தந்தை வழியாக எவரும் அறியாமல் அரசு அளிக்கும் சலுகையினை அறிவித்து நடக்கவிருந்த கொலையைத் தடுக்கிறாள். இக்கதையில் நட்பின் சிறப்பையும் அரசு திட்டத்தையும் ஆசிரியர் விளக்கி இருப்பது சிறப்பு. அதுபோலவே "மெருகு போட்ட கொலுசு" என்ற கதையில் கல்வியே அழியாச் செல்வம் என்பதையும் பட்டம் பெற்றவர்கள் தொழில் தொடங்க அரசு செய்யும் கடன் உதவியையும் சுட்டிக் காட்டியுள்ளார். "குவைத் பயணம்," "ஏமாற்றாதே, ஏமாறாதே" என்ற இருகதைகளின் 'கரு' ஒன்றாக இருந்தாலும் குவைத் பயணம் என்பதில் வெளிநாட்டிற்கு வேலை தேடிச் செல்வோர் ஏமாற்றப்படுவதையும், எதை எங்கு பேசவேண்டும் என்பதை அறிந்து பேசு' என்பதை அடுத்த கதையிலும் விளக்கி வேறுபடுத்திக் காட்டியுள்ளார். 
 
"கரடிப்பிடி" என்ற மிகச் சிறந்த கதை தாயுள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அத்தாய்க்குப் "புனிதவதி" என்ற ஏற்றமான பெயரை அமைத்துள்ளார். குடிப்பழக்கத்தின் கொடுமையை விளக்க அத்தாயின் மகனையே உறுப்பினனாக்கி உள்ளார். குடிப்பதற்காகப் பணம் வேண்டித் தன்தாயையே கொலை செய்யத் துணிகிறான். அந்த நிலையிலும் மகன் மீது பழிவரக் கூடாது என்றே தாயுள்ளம் போராடுகிறது. கதையின் போக்கும் படிப்பவர்களை மகிழ்விக்கும். "யாருக்காக” என்ற கதை “மிதிவண்டி” ஒன்றைமையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கதை. அது யாருக்கு அவசியம் என்ற மனப் போராட்டம். எவனுக்கு அது மிகமிக அவசியமோ அவனுக்கு அது பயன்படாமல் போகிறது. என்றாலும் அவன் அதைப் பற்றியகவலை கொள்வதில்லை. துன்பத்தை மகிழ்வாகவே ஏற்கிறான்.
 
"உடைந்த நாற்காலி" என்ற கதையில் ஆசிரியர் உழவுத் தொழிலின் மேன்மையைக் காட்டுகிறார். இதே கதையில் நாட்டில் பலர் நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் உள்ள உடைமைகளை விற்றெடுத்தும் கொண்டு பட்டினம் செல்வதும் அலைவதும் ஏமாற்றப்படுவதும் காணக் கூடிய நிகழ்ச்சியினை இணைத்துக் காட்டியுள்ளார். இதுவும் பட்டறிவால் உணரும் கதையாகவே அமைத்துள்ளார். "கற்றது கையளவு” என்ற கதை கூர்மையான அறிவினைப் பெறுதலே சிறப்பு என்று காட்டும் கதை. பொதுவாக ஆசிரியர் நகைச்சுவை உணர்வு உடையவர் என்பதை அவருடன் பழகிய நண்பர்கள் அறிவர். இக்கதையை நகைச்சுவை கூட்டி அமைத்துள்ளார். துணுக்குகளின் தோரணமாகவும் அறிவுக்கு விருந்தாகவும் அமைந்துள்ள கதை இதுவாகும். ஆசிரியரின் பல்துறை அறிவு கதைகளின் இடையில் அமைந்திருப்பதையும் படிப்போர் அறியலாம்.
 
சமுதாய விழிப்புணர்வுக்கு வழிகாட்டும் கதைகளை எழுதியுள்ள ஆசிரியரை படிப்பவர்களும் பாராட்டுவர் என்பதில் ஐயமில்லை.
 
-திரு.நா.கருணாமூர்த்தி -முகநூல் பதிவு
by Swathi   on 31 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு
சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும்  திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும் திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது
தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து
அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல்  பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல் பரிசளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள் ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள்
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.