LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1187 - கற்பியல்

Next Kural >

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் - முன்னொரு ஞான்று காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வற்று - அப்புடைபெயர்ந்த அளவிலே பசப்பு அள்ளிக் கொள்வது போல வந்து செறிந்தது. ('கொள்வது' என்பது குறைந்து நின்றது. அள்ளிக் கொள்வது - அள்ளிக் கொள்ளப்படும் பொருள். 'அப்புடைபெயர்ச்சி மாத்திரத்திற்கு அவ்வாறாயது, இப்பிரிவின்கண் ஆமாறு சொல்ல வேண்டுமோ'? என்பதாம்.)
மணக்குடவர் உரை:
முயங்கிக்கொண்டு கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தனன்: அவ்வளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை. இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்- முன் பொருநாள் காதலரைத் தழுவிக் கிடந்த நான் அறியாது ஒரு சிறிது தள்ளிப்படுத்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வு அற்று- அங்ஙனம் படுத்த அளவில் அள்ளிக்கொள்ளும் அளவாகப் பசலை வந்துதிரண்டுவிட்டது. அப்புடை பெயர்ச்சிக்கே அவ்வாறான பசலை, இப்பிரிவின் கண் எவ்வாறாகுமென்பதைச் சொல்லவும் வேண்டுமோ என்பதாம். ஏகாரம்தேற்றம்.
கலைஞர் உரை:
தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!.
சாலமன் பாப்பையா உரை:
முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(இப்போது நினைவுக்கு வருகிறது.) என் காதலரைத் தழுவி அணைத்துக்கொண்டு நெடுநேரம் மயங்கி இருந்துவிட்டு அந்தத் தழுவலை விட்டு நீங்கின உடனே என் மேனி நிறத்தைப் பசலை அள்ளிக் கொண்டதுபோல் இருப்பது வழக்கம். (அதனால் இந்தப் பசப்பு அவருடைய அணைப்பு இல்லாத போதெல்லாம் தானாகவே உண்டாவது.)
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
முன்னர் ஒருபோது காதலரைத் தழுவிக் கிடந்தேன். அறியாமல் சிறிது விலகிவிட்டேன். விலகிய அந்தப் பொழுதிலேயே பசப்பு நிறம் அள்ளிக் கொள்ளப்படுகின்ற பொருளினைப் போல வந்து நிறைந்துவிட்டது.
Translation
I lay in his embrace, I turned unwittingly; Forthwith this hue, as you might grasp it, came on me.
Explanation
I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.
Transliteration
Pullik Kitandhen Putaipeyarndhen Avvalavil Allikkol Vatre Pasappu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >