LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 158 - இல்லறவியல்

Next Kural >

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மிகுதியான் மிக்கவை செய்தாரை - மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் வென்றுவிடல் - தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக. (தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக. இது பொறுத்தானென்பது தோல்வியாகாது: அதுதானே வெற்றியாமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
மிகுதியான் மிக்கவை செய்தாரை - செருக்கினால் தமக்குத் தீயவை செய்தவரை ; தாம் தம் தகுதியான் வென்று விடல் - தாம் தம் பொறையினால் வென்று விடுக. சரிக்குச் சரி தீங்கு செய்யும் இழுக்க வெற்றி ஒழுக்கத் தோல்வி யென்றும்; தீயவை செய்தாரைப் பொறுத்துக் கொள்ளும் ஒழுக்க வெற்றியே உண்மையான வெற்றி யென்றும் உணர்த்தற்குத் 'தகுதியான் வென்று விடல்' என்றார். 'விடல்' வியங்கோள் வினை.
கலைஞர் உரை:
ஆணவங்கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.
சாலமன் பாப்பையா உரை:
மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பின் என் செய்வார்களென்றால்) கோப மிகுதியால் குற்றம் செய்து விட்டவர்களைப் பொறுமையுடையவர்கள் தாமாகவே அவர்களுக்கு உதவிகள் செய்து தம்முடைய பெருங் குணத்தால் அவர்களை வசப்படுத்தி விடுவார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
மனதில் செருக்குக் கொண்டு தீமையானவற்றைச் செய்பவர்களைத் தாம் தம்முடைய பொறுமையினால் வென்றுவிடவேண்டும்.
Translation
With overweening pride when men with injuries assail, By thine own righteous dealing shalt thou mightily prevail.
Explanation
Let a man by patience overcome those who through pride commit excesses.
Transliteration
Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham Thakudhiyaan Vendru Vital

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >